March 12, 2026
Puthumai-Pen-Thittam

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமை பெண் திட்டம்’ – செப்., 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி வைக்கின்றார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ்அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டுக்கு மட்டும் 698 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்கு புதுமைப் பெண் திட்டம் என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

Source : https://tamil.news18.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *